சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர்ம வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல், காய்கறிகள் மற்றும் நறுமணப்பயிர்களை அதிக விலைக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் விற்பனை செய்வதற்குத் தரநிர்ணயம் அவசியம். சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மையங்களில் உயிர்ம வேளாண் விளைபொருள் தரநிர்ணய ஆய்வகங்கள் ரூ.6 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன் மூலம் உழவர்கள் தங்கள் விளைபொருட்களை ஆய்வு செய்து அதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்து, கூடுதல் இலாபம் ஈட்ட வழி வகை செய்யப்படும்.
அண்மைக்காலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், வேளாண் தொழிலாளர் மற்றும் இயந்திரப் பற்றாக்குறை, பூச்சி, நோய்த்தாக்குதல், வேளாண் பொருள்களின் நிலையற்ற விலை போன்ற காரணங்களினால் வேளாண்மையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இவற்றிற்கு, புதுமையான சிந்தனை மற்றும் நவீன ஆராய்ச்சி முறைகளைக் கொண்டு விரைந்து தீர்வு காண்பது அவசியமானதாகும். எனவே, பல்வேறு விதமான முக்கிய சவால்களை வரிசைப்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே வேளாண் நிரல் திருவிழா மூலம் தகுதியான தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும். இதற்கென, வேளாண் விஞ்ஞானி ‘டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்’ அவர்களது பெயரில் ஆராய்ச்சி நிதியாக 2025-26ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
The post ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் உயிர்ம வேளாண் விளைபொருள் தர நிர்ணய ஆய்வகங்கள் appeared first on Dinakaran.
