சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது: கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள், அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து 2025-26ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.* முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டு 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் கடந்த 2001ம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் ஊரக பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காக கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. 2025-26ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் ரூ.600 கோடி மதிப்பீட்டில் கட்டித்தரப்படும்.* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ் 2025-26ம் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் ரூ.1,087 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். * இந்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
The post ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ₹29,465 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.