ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி நகரில் யாசகம் கேட்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வெளி மாநிலங்கள் மற்றம் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகின்றனர். இது தவிர வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், சுற்றுலா தலங்கள் மற்றும் ஊட்டி நகரின் முக்கிய கடைவீதிகள் மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு கோடை காலம் துவங்கினாலேயே ஊட்டிக்கு ஏராளமான யாசகம் கேட்பவர்கள் படையெடுத்து விடுகின்றனர்.
இவர்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள், முக்கிய கடை வீதிகள், நடைபாதைகள் மற்றும் சாலைகளில் நின்று கொண்டு யாசகம் கேட்க துவங்கி விடுகின்றனர். தற்போது ஊட்டி நகருக்கு இது போன்று பலர் வந்துள்ளனர். இவர்கள், நகரின் முக்கிய கடை வீதியான கமர்சியல் சாலை நடைபாதையில் அங்காங்கே நின்றுக் கொண்டு யாசகம் கேட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளை தொல்லை செய்கின்றனர். ஏராளமான வயதானவர்கள் நாள் தோறும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு யாசகம் கேட்கின்றனர். ஒரு சிலர் கிராமப்புறங்களில் இருந்து வந்து யாசகம் கேட்கின்றனர்.
மேலும், சில பெண்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு நடைபாதையில் செல்பவர்ளின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக யாசகம் கேட்கின்றனர். சிலர் நடைபாதைகளில் நடந்து செல்லும் போது திடீரென காலை பிடித்தும் யாசகம் கேட்கின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, ஊட்டி நகரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் யாசகம் கேட்டு தொல்லை தரும் நபர்கள் மற்றும் பெண்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது மறு வாழ்வு இல்லங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியறுத்தியுள்ளனர்.
The post ஊட்டி நகரில் யாசகம் கேட்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள், பயணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.