மும்பை: தொடர் தோல்வியால் லீக் சுற்றுடன் வெளியேறும் பெங்களூரு தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அதன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் கனவை கலைத்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட்டின் கடைசி லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடந்தது. அதில் நடப்பு சாம்பியன் ஆர்சி பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு ஆறுதல் வெற்றிக்காக களம் காண, புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் இருந்த மும்பை வெற்றி பெற்றால் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறலாம் என்ற கனவுடன் களம் கண்டது.
முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் மட்டும் இழந்து 199 ரன் குவித்தது. அதனால் 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை 20 ஓவரில் 188 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டனாது.அதனால் பெங்களூரு 11 ரன் வித்தியாசத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றியுடன் விடை பெற்றது.
தோல்வி அடைந்ததால் நேரடியாக பைனலுக்கு முன்னேறும் மும்பையின் கனவும் கலைந்தது. ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த 2 இடங்களை பிடித்த மும்பை, குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மும்பையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் களம் காணுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மார்ச் 15ம் தேதி மும்பையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொள்ளும்.
* மும்பை – குஜராத் இன்று மோதல்
* நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் 2 முறை மோதியுள்ளன.
* வதோதராவில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த 2வது லீக் ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்திலும் மும்பையே வென்றுள்ளது.
* இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இவ்விரு அணிகளும் 6 முறை களம் கண்டுள்ளன. அந்த 6 ஆட்டங்களிலும் மும்பையே வென்று இருக்கிறது.
* தமிழக வீராங்கனைகளில் ஹேமலதா தயாளன் குஜராத் அணியிலும், கமாலினி குணாளன், கீர்த்தனா பாலகிருஷ்ணன் ஆகியோர் மும்பை அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.
The post மகளிர் பிரீமியர் லீக் டி20: நேரடி இறுதி வாய்ப்பை பறிகொடுத்த மும்பை appeared first on Dinakaran.