தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றவர். ஏழை மக்களுக்காகச் சட்டம் பயின்றதோடு, அவர்களின் உரிமைக்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தமது இல்லத்திலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பல புத்தகங்களைக் கொண்ட நூலகத்தினையும் அமைத்திருந்தார்.
1918ஆம் ஆண்டு தமிழறிஞர் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களால் தொடங்கப்பட்ட, “சென்னை தொழிலாளர் சங்கத்தில்” இணைந்து பணியாற்றினார். பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காக, “சிந்தனைச் சிற்பி” என போற்றிப் புகழப்பட்டார். அன்னாரது 166வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், சேகர்பாபு மரியாதை செலுத்தினர். ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் புகழாரம் தெரிவித்துள்ளார் அதில்,
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!
“போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்!
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post பாட்டாளி மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 166வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.