பெரம்பூர்: அயனாவரம் மற்றும் தலைமைச் செயலக காலனி உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக சைக்கிள்கள் அதிகளவில் திருடு போனது. இதுகுறித்து சில புகார்கள் பெறப்பட்டன. சிலர், சைக்கிள் தானே என்று சாதாரணமாக விட்டு விட்டனர். தற்போது வரும் கியர் சைக்கிள்கள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்ற சைக்கிள்கள் திருடு போகும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் திருடு போன இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஒரே நபர் பல்வேறு இடங்களில் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. அயனாவரம் மார்க்கெட் தெருவில் அவரை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியை சேர்ந்த வெங்கட்ராமன் (எ) வெங்கடேஷ் (59) என்பதும், இவர் அயனாவரம் தலைமைச் செயலக காலனி, புளியந்தோப்பு, சூளை, பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சைக்கிள்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இவர், 25 சைக்கிள்களை பல்வேறு இடங்களில் திருடி, மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரும்பாலான சைக்கிள்களில் லாக் என்பது தற்பொழுது வளையம் போல வருகிறது அதனை ஒரு கம்பியை கொடுத்து எளிதில் திறந்து விடலாம் அந்த பார்முலாவை வைத்துக்கொண்டு இவர் தொடர்ந்து சைக்கிள்களை திருடி வந்ததும், ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிள் உட்பட பல்வேறு சைக்கிள்களை திருடி அதனை வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் நபர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட வெங்கட்ராமனை சைக்கிள் திருட்டு வழக்கில், கடந்த 2009ம் ஆண்டு போலீசார் கைது செய்து, 40 சைக்கிள்கள் வரை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
The post வடசென்னையை கலக்கிய பிரபல சைக்கிள் திருடன் கைது: 25 சைக்கிள்கள் பறிமுதல் appeared first on Dinakaran.