×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அடிப்படை பிரச்னைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

பெரம்பூர்: வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், என அப்பகுதி மக்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில், அந்த குடியிருப்பு வளாகத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என சட்டமன்ற உறுப்பினர் சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்பேரில், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் ஆகியோர் நேற்று இந்த குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வு வேணும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்கா, சிசிடிவி கேமரா, குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி பொறியாளர் இளம்பருதி, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் அடிப்படை பிரச்னைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Urban Habitat Development Board ,Perambur ,Vyasarpadi Moorthingar Street ,MLA ,R.D. Shekhar ,Dinakaran ,
× RELATED இதுவரை கிரைய பத்திரம் பெறாமல் உள்ள 12,495...