- திமுக விளையாட்டுக்கழக அபிவிருத்திக் குழு
- கிராண்ட் கிரிக்கெட் போட்டி
- முதல் அமைச்சர்
- தயாநிதி மாறன்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக…
- தின மலர்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தயாநிதி மாறன் எம்பி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கு இடையேயான மாபெரும் கிரிக்கெட் போட்டி, சென்னை மெரினா விளையாட்டு திடலில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில், ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. முதல்நாளில், நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றது. அன்று மாலையே முதல் சுற்று நிறைவடைந்து, கால் இறுதி போட்டி இரவு 2 மணி வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 2ம் நாள் அரை இறுதி சுற்று நடைபெற்றது. முன்னதாக பெண்கள் பிரிவு போட்டியில், மேயர் பிரியா தலைமையில் ஒரு அணியும், திமுக மகளிர் அணியினர் 2 அணிகளாகவும், தகவல் தொழில்நுட்ப அணி பெண்கள் பிரிவு ஒரு அணியாகவும் என 4 அணிகள் மோதின.
இதில் இறுதி போட்டியில் தகவல் தொழில்நுட்ப பெண்கள் அணியினரும், திமுக மகளிர் அணியினரும் மோதினர். இதில் தகவல் தொழில்நுட்ப பெண்கள் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர். 2வது பரிசை திமுக மகளிர் அணியினர் பெற்றனர். முதல் இடத்தை பிடித்த தகவல் தொழில்நுட்ப பெண்கள் அணியினருக்கு கோப்பையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் மொபட் வழங்கப்பட்டது. 2வது இடத்தை பிடித்த திமுக மகளிர் அணிக்கு ரூ.75 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் மொபட் வழங்கப்பட்டது.
2வது நாள் மாலை ஆண்கள் பிரிவுக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியும், தகவல் தொழில்நுட்ப அணியும் மோதின. இதில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சிறப்பாக விளையாடி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. முதல் இடத்தை பிடித்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் மொபட் வழங்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப அணிக்கு 2வது பரிசாக கோப்பையும், ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் மொபட் வழங்கப்பட்டது. 3வது இடத்தை பெற்ற திமுக இளைஞர் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், ஒவ்வொரு ஆட்டத்திலும் மிகச்சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு மேன் ஆப் தி மேட்ச் பரிசாக ‘ஸ்போர்ட்ஸ் சைக்கிள்’ வழங்கப்பட்டது. நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மேன் ஆப் தி மேட்ச் தேர்வு செய்து சைக்கிள் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போட்டியில் சிறப்பாக ஆடிய தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கேசவன் என்பவருக்கு ஓட்டுமொத்த சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் சிறப்பாக ஆடிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் சதீஷ் கண்ணன் என்பவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்த வீரர்களுக்கும், பந்து வீசிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வே.சபரீசன், எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர்கள் நே.சிற்றரசு, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, ஆர்.டி.சேகர், எம்எல்ஏ,
தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன், சிறுபான்மையினர் அணி செயலாளர் சுபேர்கான், பகுதி செயலாளர்கள் எஸ்.மதன்மோகன், ஏ.ஆர்.பி.ஏம்.காமராஜ் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில நிர்வாகிகள் எஸ்.ஆர்.பார்த்திபன், நிவேதா ஜேசிகா, எஸ்.கார்த்திக், ஆர்.கோபால்ராம், மு.வாசிம் ராஜா, வே.கவுதமன், தனுஷ் எம்.குமார், வழக்கிறஞர் பி.கே.பாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் பிறந்தநாளையொட்டி மாபெரும் கிரிக்கெட் போட்டி திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கோப்பையை வென்றது: தயாநிதி மாறன் எம்பி தலைமையில் பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.