சென்னை: ராயப்பேட்டையில் தலைமை ஆசிரியை வீட்டில் சிறுக சிறுக 29 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடிய வேலைக்கார பெண்ணை அவரது உறவினருடன் போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்நத்வர் மகபூப் ரஹ்மானி (57). இவர், ராயப்பேட்டை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டில் அவரது மருமகள் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது, அதில் 29 சவரன் நகை, 18 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் மட்டும் மாயமானதால், 2 ஆண்டுகளாக வீட்டில் வேலை செய்யும் பெண் ரபீகா (35) மீது சந்தேகம் வந்தது. இதுகுறித்து ஐஸ்அவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தலைமை ஆசிரியை வசித்து வரும் வி.எம்.தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, வேலைக்கார பெண் ரபீகா (35), தனது உறவினரான ஜலாலுதீன் அக்பர் (60) உதவியுடன் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ரபீகாவை பிடித்து விசாரணை நடத்திய போது, மாநகராட்சி பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வரும் தனது மாமா, ராயப்பேட்டை ஜவகர் உசைன்கான் ெதருவை சேர்ந்த ஜலாலுதீன் அக்பர் உதவியுடன் நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து ரபீகா மற்றும் அவரது மாமா ஜலாலுதீன் அக்பர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 நகைகள், 18 கிராம் வெள்ளி, ரூ.1.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post தலைமை ஆசிரியை வீட்டில் 29 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு: வேலைக்கார பெண், உறவினருடன் கைது appeared first on Dinakaran.