- பாவந்தங்கல் ரயில் நிலையம்
- ஆலந்தூர்
- பவந்தங்கல் ரயில் நிலையம்
- பரணி
- பிரவந்தங்கல் பிராந்தியம்
- சென்னை
- பவந்தங்கல் ரயில் நிலையம்
ஆலந்தூர்: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். ஒருவர் தப்பி ஓடினார். இதுதொடர்பாக, 6 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பரணி (35). இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், பணி முடிந்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
பின்னர், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடையில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர், திடீரென பெண் காவலர் பரணியின் கழுத்தில் இடந்த ஒன்றரை சவரன் ெசயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். பொதுமக்கள், அந்த நபரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கினர். புகாரின் பேரில், மாம்பலம் ரயில்வே போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சக்திய பாலு (23) என தெரியவந்தது.
இவர், கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரயில்களில், ரயில் நிலையங்களில் தொடர் செயின் பறிப்பு மற்றும் பணம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழிப்பறி கொள்ளையன் சக்திய பாலுவை கைது செய்தனர். இதை தொடர்ந்து, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக, பழவந்தாங்கல் ஆய்வாளர் ரெங்கநாதன், போலீசாருடன் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, அங்கு கத்தியுடன் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொருவர் தப்பினார். விசாரணையில், அந்த வாலிபர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்த பார்த்திபன் (19) என்பதும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அவரை மாம்பலம் ரயில்வே ஆய்வாளர் வைரவன், பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சஞ்சீவ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது ரயிலில் இருந்து இறங்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரை பிடித்து, அவர்களிடமும் விசாரித்து வருகின்றனர். கத்தியுடன் தப்பி ஒடியவர் முதலாம் ஆண்டு படிக்கும் விஸ்வா என்பதும் தெரியவந்தது. இந்த இருவரும் கத்தியுடன் எதற்கு பழவந்தாங்கல் வந்தார்கள் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் யாரையாவது வெட்டுவதற்காக திட்டமிட்டு இருந்தார்களா என விசாரிக்கின்றனர்.
The post பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவன் கைது: தப்பிய ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.