மாமல்லபுரம்: தமிழ்நாடு அரசின், ‘தாட்கோ’ நிறுவனம் மூலம் கடனுதவி பெற்று, சொந்தமாக சலவை நிலையம் தொடங்கி, அதில், 20 பேருக்கு வேலையும் வழங்கி, வரும் 2030க்குள் 1000 பேரை பணியில் அமர்த்த வியூகம் வகுத்திருக்கும், மாமல்லபுரத்தை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரை அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. அனைத்து, மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்கள் உள்ளன. கடந்த, 1976ம் ஆண்டு முதல் தாட்கோ நிறுவனம் செயல்படுகிறது. தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பல்வேறு சுய வேலை வாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அது மட்டுமின்றி, ஆதி திராடவிடர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த, பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை வங்கி கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. மாமல்லபுரம் அடுத்த, கொக்கிலமேடு பகுதியை சேர்ந்தவர் ப.ஐயப்பன், ஆடை வடிவமைப்பாளர். இவர், தமிழ்நாடு அரசு தாட்கோ நிறுவனம் மூலம் கடனுதவி பெற்று, வீட்டிலேயே ‘தாட்கோ’ என்ற பெயரில் சலவை நிலையம் தொடங்கி நடத்தி வருகிறார். இவர், மாமல்லபுரம் பூஞ்சேரி, வடகடம்பாடி, தேவனேரி, பட்டிப்புலம், கிருஷ்ணன் காரணை, நெம்மேலி, வட நெம்மேலி, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் பண்ணை வீடுகளில் பயன்படுத்தப்படும் துணி வகைகளை சேகரித்து சலவை செய்து, அதனை உலர்த்தி, வெயிலில் காயவைத்து, அதனை முறையாக மடித்து கொடுக்கிறார்.
இதற்காக, பிரத்யேக மெஷின்களை தனது வீட்டிலேயே வைத்து, 20க்கும் மேற்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுத்து அசத்தியுள்ளார். மேலும், வேலையாட்களுடன் சேர்ந்து துணிகளை சலவை செய்வது, துணிகளை பிரிப்பது, அயர்னிங் செய்து மடித்து வைப்பது என பல்வேறு வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.தாட்கோ நிறுவனம் மூலம் கடனுதவி பெற்று, தாட்கோ என்ற பெயரிலேயே சலவை நிறுவனம் தொடங்கி, அதில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கும் ஐயப்பனை பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் இந்த தாட்கோ சலவை நிலையத்தில் துணிகளை எப்படி சலவை செய்து அதனை உலர்த்தி காயவைத்து மடிக்கின்றனர். ஒவ்வொரு மிஷினுக்கும் பாதுகாப்பாக மின்சார வயர் கொண்டு வரப்பட்டுள்ளதா? ஊழியர்கள் பாதுகாப்பாக வேலை செய்கின்றனரா? அவர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் திடீரென நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன், முறையாக சலவை நிலையத்தை நடத்தி வரும் ஐயப்பனை அக்குழுவினர் வெகுவாக பாராட்டி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் தாட்கோ சலவை நிலையம் நடத்தும் ஐயப்பன் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு தாட்கோ நிறுவனம் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எப்போதும் இல்லாத வகையில், இளைஞர்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
ஏற்கனவே, உள்ள சலவை நிலையத்துக்கு அருகே, விரைவில் 2வது தாட்கோ சலவை நிலையத்தை தொடங்க உள்ளேன். இதில், பட்டதாரி இளைஞர்கள் பலருக்கு வேலை வழங்க உள்ளேன். வேலையில்லா நிலையை போக்கவும், இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரும் 2030க்குள் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 1000 பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
நான் பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு, வேலை தேடி கம்பெனி, கம்பெனியாக அலைந்து திரிந்த போது, தாட்கோ மூலம் எனக்கு கடனுதவி கிடைத்தது. எனது வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
The post ‘தாட்கோ’ நிறுவனம் மூலம் கடனுதவி பெற்று சலவை தொழிலில் அசத்தி வரும் ஆடை வடிவமைப்பாளர் appeared first on Dinakaran.