பூந்தமல்லி: குடும்பம் நடத்த மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காததால் மாமியாரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் பிரியா (42). இவரது மகள் கீர்த்திகா (24). இவருக்கு ஜெயசீலன் (31) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்ததால் கடந்த 3 வருடங்களாக கீர்த்திகா தனது தாய் வீட்டிலேயே தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி கீர்த்திகாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியார் பிரியா வீட்டிற்குச் சென்று ஜெயசீலன் தகராறு செய்துள்ளார். அதற்கு தனியாக வீடு பார்த்த பின்பு மகளை அனுப்பி வைப்பதாக பிரியா கூறியுள்ளார். இதனால் மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த ஜெயசீலன், கல்லை எடுத்து மாமியாரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த பிரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயசீலனை நேற்று கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயசீலனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post குடும்பம் நடத்த மனைவியை அனுப்பி வைக்காததால் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன்: வன்கொடுமை சட்டத்தில் கைது appeared first on Dinakaran.