நாக்பூர்: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் நேற்று விதர்பா அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. ரஞ்சி கோப்பைக்கான இரு அரை இறுதி டெஸ்ட் போட்டிகள் நேற்று துவங்கின. நாக்பூரில் நடந்த போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் துவக்க வீரர் அதர்வா தெய்டே 4 ரன்னில் வீழ்ந்தார்.
மற்றொரு துவக்க வீரர் துருவ் ஷோரி அற்புதமாக ஆடி 74 ரன் குவித்தார். பின் வந்த வீரர்களும் தங்கள் பங்குக்கு சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோர் உயர உதவினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 88 ஓவர்களை சந்தித்திருந்த விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்தது. யாஷ் ரத்தோட் 47, கேப்டன் அக்ஷய் வாத்கர் 13 ரன் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
மும்பையின் சிவம் துாபே, ஷாம்ஸ் முலானி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விதர்பா அணியின் வீரர்கள் அனைவரும் நேர்த்தியாக பேட்டிங் செய்து ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். 2வது நாளான இன்றும் முதல் இன்னிங்சை தொடரவுள்ள விதர்பா, மெகா ரன் குவிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* கேரளா நிதானம்
அகமதாபாத்தில் நடந்த மற்றொரு அரை இறுதியில் கேரளா, குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேரளா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சை துவக்கிய அந்த அணியின் அக்ஷய் சந்திரன் 30, ரோகன் குன்னம்மல் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சச்சின் பேபி சிறப்பாக ஆடி 69 ரன் சேர்த்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், கேரளா 89 ஓவர்களை சந்தித்து, 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்தது. சச்சின் பேபி, முகம்மது அசாருதீன் களத்தில் உள்ளனர். குஜராத்தின் அர்ஸன் நாக்வஸ்வல்லா, பிரியஜித்சிங் ஜடேஜா, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post ரஞ்சி கோப்பை அரையிறுதி விதர்பா அணி விளாசல் முதல் நாளில் 308 ரன் குவிப்பு: மும்பை பரிதாப பந்துவீச்சு appeared first on Dinakaran.