சென்னை: “ஏன் ஹலால் உணவு போடுறீங்க?. இந்துக்கள் எப்படி சாப்பிடுவது?” என பாஜ மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் ஓட்டல் பணியாளரிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு பதில்களை அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜவில் மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். மதுரை சேர்ந்த இவர் நபார்ட் வங்கி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், அவர் ஓட்டல் ஒன்றில் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரபல ஹோட்டலில் சாப்பிடும் அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி துளைத்து எடுக்கிறார். ராம சீனிவாசன் ஊழியரிடம் “இங்கு ஹலால் பண்ணிதான செய்றீங்க?” எனக் கேட்கிறார். அதற்கு ஊழியர், “ஆமா சார், ஹலால் பண்றது தான்” எனக் கூறுகிறார். அதற்கு ராம சீனிவாசன், “ஓனர் இந்துவா? முஸ்லீமா?” எனக் கேட்கிறார். அதற்கு ஊழியர், “ஓனர் இந்து தான்” என பதில் அளிக்கிறார். உடனே, “சாப்பிட வர்றவங்க எல்லாம்?” எனக் கேள்வி எழுப்ப, “எல்லா மக்களும் வர்றாங்க” என ஊழியர் பதில் அளிக்கிறார்.
அதற்கு ராம சீனிவாசன், “முஸ்லிம் மத முறைப்படி ஹலால் செய்தால் நாங்க எல்லாம் எப்படி சாப்டுறது?” எனக் கேள்வி எழுப்புகிறார். அதைத்தொடர்ந்து, “பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் ஹலால் செய்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன், அந்த நம்பிக்கையை நான் ஏற்கிறேன். ஹலால் செய்த உணவை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், என் சென்டிமெண்டை ஏற்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்புகிறார். உணவுகள் ஹலால் செய்யப்படுவது பற்றி ஓட்டல் ஊழியரிடம் ராம சீனிவாசன் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், இதுபோன்ற சில்லரைப் பிரச்னைகளை கிளப்பி மத வெறுப்பைத் தூண்டுவதை பாஜ வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஆனால் இது தமிழ்நாட்டில் எடுபடாது என சமூக வலைத்தளங்களில் பலரும் ராம சீனிவாசனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
The post ஹலால் உணவை ஏன் போடறீங்க? ஓட்டலில் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜ பிரமுகர்; பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.