×

குறைந்த பணம் இருப்பால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம்: பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்

சென்னை: குறைந்த பணம் இருப்பு போன்ற காரணங்களால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் பாஸ்டேக் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் பாஸ்டேகில் உள்ள பார்கோட்டை தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பயனரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இணைந்து சுங்க சாவடி கட்டணத்தை ஒழுங்குப்படும் வகையிலும், மோசடிகளை தடுக்கும் வகையிலும் பாஸ்டேக் பயன்படுத்துவதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, சுங்கச் சாவடியை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்தபட்ச இருப்புத்தொகை இருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பாஸ்டேக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். புதிய விதிகளின்படி, சுங்கச்சாவடியை அடைந்தவுடன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டால், டோல் கட்டணம் செயல்படுத்தப்படாது. மேலும், ஸ்கேன் செய்வதற்கு குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்பு பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தால், கட்டணமும் நிராகரிக்கப்படும். அதாவது, சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பாஸ்டேக் பிளாக் லிஸ்டிலோ அல்லது ஹாட்லிஸ்டிலோ அல்லது குறைந்த பேலன்ஸ் தொகையை கொண்டிருந்தால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். ஒரு சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு முன் பாஸ்டேக் நிலையை சரிசெய்ய 70 நிமிட சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடியை அடைந்தவுடன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டால், ஒரு பயனர் இரு மடங்கு சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் டேக் ஸ்கேனிங் செய்த 10 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்யப்பட்டால், ஒருமுறை அபராதத் தொகையைத் திரும்பப் பெறக் கோரலாம். வாகனம் பாஸ்டேக் பார்கோடை கடந்து 15 நிமிடங்களுக்கு பிறகு சுங்கப் பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் கூடுதல் கட்டணங்களை செலுத்த நேரிடும். எனவே, பாஸ்டேகில் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பாஸ்டேக் நிலையைச் சரிபார்த்து, அது செயலில் உள்ளதா மற்றும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை பயணத்திற்கு முன்பு உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பாஸ்டேக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தடுக்க கேஒய்சி(KYC) விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும். பாஸ்டேக்கை முன்கூட்டியே நிர்வகிப்பதன் மூலம் புதிய விதிகளை எளிதாக கடைபிடிக்கலாம். தாமதங்கள் மற்றும் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க முடியும்.

The post குறைந்த பணம் இருப்பால் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால் சுங்க கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம்: பாஸ்டேக் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல் appeared first on Dinakaran.

Tags : Pastake ,CHENNAI ,PASTACK ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையால் சென்னை விமான...