- சிங்கப்பெருமல் கோயில்
- செங்கல்பட்டு
- சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே அபிவிருத்தி
- திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தின், ஒரு பகுதி மார்க்கத்தின் மேம்பால பால பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். தென் தமிழகத்தையும் சென்னையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. ஜிஎஸ்டி சாலை என அழைக்கக்கூடிய இந்த சாலையில் பெருங்களத்தூரில், இருந்து செங்கல்பட்டு வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தான் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் ரயில்வே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. அதனால், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இந்த சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, மறைமலைநகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த 2006-07ல் ஒப்பந்தப்புள்ளி எடுக்கப்பட்டன. இதற்கு, அரசு ₹52.80 கோடி நிதி ஒப்புதல் வழங்கி கடந்த 2011 பிப்ரவரி 28ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், பெரும்புதூர் செல்லும் பக்கமுள்ள பாலப்பகுதி மட்டும் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அப்போது, இப்பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்கப்பெறாததால் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் மறைமலைநகர் – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய டிசைன்கள் மாற்றப்பட்டன. இதற்கு, கடந்த 2016 ஜூன் 3ம் தேதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது. 2021 வரை மேம்பாலப்பணிகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு மீண்டும் இந்த பணிகளை துவங்க முடிவு செய்தது. இதன் திட்டமதிப்பீடு ₹138 கோடி என்கிற நிலையில், ₹90.74 கோடி மதிப்பில் இந்த பால பணிக்கு கடந்த 2021 ஜூன் 10ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. கடந்த அக்டோபர் 29ம் தேதி மதுரையை சேர்ந்த ஆர்.ஆர் இன்ப்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த பாலப்பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஒரு பகுதி பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான் திருவள்ளூர், பெரும்புதூர், ஒரகடம், ஆப்பூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 30 முறைக்கும் மேல் மூடப்படுவதால், ஒவ்வொரு முறையும் ஒரகடம் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரகடம், வல்லம், பெரும்புதூர் சிப்காட்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் சரக்குகளை ஏற்றி செல்வதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
சிங்கப்பெருமாள் கோயிலில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் உள்ளூர் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். தற்போது திருச்சி – சென்னை மார்க்கமாக உள்ள பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த பகுதியில் இருந்து, ஒரகடம் செல்வதற்கான பாலத்தின் வழியும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி மார்க்கமாக உள்ள பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் பணிகள் முடிவடைந்து, இருப்பதால் பணிகள் முடிவடைந்த பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 16 வருடங்களாக கட்டப்பட்டு வரும் இப்பாலம் திறக்கப்பட்டால், 20 ஆண்டுகால தலைவலிக்கு தீர்வாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு இப்பாலத்தின் ஒரு பகுதியை மட்டும் பொதுமக்களின் போக்குவரத்திற்காக திறக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post சிங்கப்பெருமாள் கோவிலில் ஒரு பகுதி மேம்பால பணிகள் நிறைவு: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.