திருப்பூர், பிப்.17: கோவையில் துவங்கி திருப்பூர் வழியாக கரூரில் நிறைவடைகிறது நொய்யல் ஆறு.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி காரணமாக சாய கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யப்படாமல் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டதன் காரணமாக நொய்யல் ஆறு மாசடைந்து தற்போது பயன்படுத்தக்கூடிய முடியாத நிலையில் உள்ளது.
இருப்பினும் ஜீரோ டிசார்ஜ் முறை செயல்படுத்த தொடங்கிய பிறகு சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து யூனியன் மில் சாலை செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் பாலத்திற்கு கீழ் ஆகாய தாமரைச் செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நீரின் வழித்தடம் பாதிக்கப்படுவதோடு,மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் சூழலில் அவை பாலத்திற்கு அடியில் அடைபட்டு வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தவிர்த்து ஆரம்பத்திலேயே நொய்யல் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நொய்யல் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் appeared first on Dinakaran.