×

மெய்யூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடக்கம்

 

ஊத்துக்கோட்டை, பிப்.17: மெய்யூர் ஊராட்சியில், பொதுமக்கள் இலவச பயணம் செய்ய தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 2 ஆட்டோக்கள் சேவையை கோட்டாட்சியர் தொடக்கி வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே, மெய்யூர் ஊராட்சியில் விவசாயிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மலைவாழ் மக்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மெய்யூர் ஊராட்சியில் அடங்கிய குருபுரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில், குறிப்பிட்ட நேரக்கணக்கில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவமனை செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், இங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக 2 கிமீ தூரமுள்ள மெய்யூர், 3 கிமீ தூரமுள்ள மாளந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நடந்தே சென்று படித்து வந்தனர்.

இந்நிலையில், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லவும், பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் வசதியாக, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், 2 ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்கள் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் லியோ பிரிட்டோ ராஜ் தலைமை தாங்கினார். கச்சூர் அரசு மருத்துவமனை டாக்டர் அனுராதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் மாணவர்கள், கர்ப்பிணிகள் இலவசமாக பயணம் செய்ய 2 ஆட்டோக்களை கொடியசைத்து தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

The post மெய்யூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Meiyur panchayat ,Uthukkottai ,
× RELATED ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு