புழல், பிப்.17: புழல் அடுத்து கதிர்வேடு பகுதியில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சாலைகள் தார்சாலையாக சீரமைக்கப்பட்டது. இதில் மாநகராட்சி கவுன்சிலருக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மாதவரம் மண்டலம் 31வது வார்டு, புழல் அடுத்த கதிர்வேடு டேவிட் ஜெயவேல் தெரு, விநாயகர் கோயில் குறுக்கு தெரு, சிவராஜ் தெரு, நாகப்பா எஸ்டேட், ரங்கா அவென்யூ, ராகவேந்திரா அவன்யூ, பிரிட்டானியா நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை போடாமல் இருந்ததால், மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு நேரில் ஆய்வு செய்து, மேற்கண்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, மேற்கண்ட நகர் தெருகளிலும் தார்ச் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணியினை வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு நேரில் ஆய்வு செய்து, தரமான தார்ச் சாலையாக அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு, காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், மாதவரம் மண்டல அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கதிர்வேடு பகுதி சாலைகள் சீரமைப்பு appeared first on Dinakaran.