×

போரூர் அருகே ஐ.டி நிறுவன வளாகத்தில் தெருநாய் வாய், கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை: போலீசார் விசாரணை

 

பூந்தமல்லி, பிப்.17: போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் தனியார் ஐ.டி பார்க் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் மருந்துகளை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள், அங்கு வரும் ஊழியர்கள் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை துரத்தி துரத்தி கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெஸ்ட் கன்ட்ரோல் ஊழியர்கள், அந்நிறுவன வளாகத்தில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை மடக்கிப் பிடித்து, அதன் கால்கள் மற்றும் வாயை டேப் மூலம் கட்டிப்போட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அப்புறப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள், வேளச்சேரியில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த புளு கிராஸ் அமைப்பினர், அங்கு கால்கள் மற்றும் வாய் கட்டிய நிலையில் இருந்த தெரு நாய்களின் கட்டுகளை உடனடியாக அவிழ்த்து அவற்றை விடுவித்தனர். இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போரூர் அருகே ஐ.டி நிறுவன வளாகத்தில் தெருநாய் வாய், கால்களை கட்டிப்போட்டு சித்ரவதை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Borur ,Poonthamalli ,Private I. T Park ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர்...