×

ஆன்மிகத்தை அரசியலாக்க நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கோயில் குளத்தை திறந்து வைத்தார். பின்னர், ஐசிஎப் கமல விநாயகர் கோயில் பாலாலயம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கோயில் மேம்பாட்டிற்காக எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 20 கோயில்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரை மட்டத்திலிருந்து உயர்த்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தற்போது வரை 2,587 கோயிலில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றுக்கும் உதவாத, தினம்தோறும் பொய்களையே அரசியல் செய்யும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான். ஒரு காலத்தில் 10 ஆயிரம் பேர் தைப்பூசத்திற்கு கூடும் நிலைமை இருந்தது. ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 2 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.

தைப்பூச தினத்தில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அரசு போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது.  தைப்பூசம் தினத்தில் தமிழ்நாட்டில் எந்த கோயில்களிலும் சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை, மூச்சுத் திணறல்கள் கூட ஏற்படவில்லை. நிம்மதியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்மிகத்தில் தலையிட்டு அரசியலாக்க நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது உத்தரபிரதேசத்தில் நடைபெறும் கும்பமேளாவில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்கள் அண்ணாமலை கண்ணுக்கு தெரியாது. அதனால், அதுபற்றி பேச மாட்டார்.

கோடை காலத்தை முன்னிட்டு சிறிய கோயில்கள், பெரிய கோயில்கள் என்று பாராமல் அதிகமாக பக்தர்கள் கூடும் இடங்களில் அயர்மேட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல கோயில்களில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வருகிறது, பல கோயில்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, விகடன் இதழை முடக்கியுள்ளனர். இது பாஜ அரசின் அதிகார துஷ்பிரயோகம்.

அண்ணாமலை காலத்தில் தமிழகத்தில் இருந்து பாஜவினர் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படவில்லை, என்பதை அவர் உணர வேண்டும். எப்படியாவது மக்களிடையே பிளவு ஏற்படுத்தி, அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி முயற்சி செய்கிறது. இவர்களின் மதவாத அரசியல் ஒருபோதும் எடுபடாது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆன்மிகத்தை அரசியலாக்க நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,P. K. ,Sekarpapu ,Chennai ,P. K. Sekarpapu ,ICF ,Kamala Vinayagar Temple Palalayam ,Annamalai ,P. K. Sekharbabu ,
× RELATED சென்னையில் 100 கோயில்களில் திருப்பணி...