×

கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் மும்மொழி கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பது சரியல்ல: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வேலூர்: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு என்றைக்குமே ஏற்காது. ஆகவே, தமிழக கல்வி வளர்ச்சிக்கான நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.அதிமுகவின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை லட்சிய மண்டல மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எங்களுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஆகவே தேர்தல் வரும்போது கூட்டணி அமைப்போம். கூட்டணி என்பது ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக வைக்கிறோம்.

அப்படி சிதறாமல் ஓட்டு வாங்கும்போது வெற்றி கிடைக்கும். அதனால் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். ஏனெனில் மேடையில் உள்ளவர்கள், பாசறையில் உள்ளவர்கள், பொதுமக்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிறார்கள். உங்கள் கோரிக்கையை ஏற்று வரும் 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும்.இன்று மத்தியில் ஆளும் பாஜ அரசு தமிழகத்துக்கு வழங்கக்கூடிய நிதியை தர மறுக்கிறது.

இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாடு மேலும் கல்வியில் வளர்ச்சி பெற ஒன்றிய அரசு நிதியை கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ஒன்றிய அரசு நிதியை தருவோம் என்று சொல்வது சரியல்ல. மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவது சரியல்ல.அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியைத்தான் இப்போதும் கடைபிடிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது.

அதேபோல் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,112 கோடி வரவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதை கேட்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். அங்கு 39 எம்பிக்களை கொண்டு அழுத்தம் தர வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெறுபவர்கள் அடித்தட்டு கிராமப்புற மக்கள். அவர்கள் பாதிக்கப்பட கூடாது. ஆகவே ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

* நாங்க தேடி போல… எங்கள தேடி வர்றாங்க…

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது பல்வேறு அணிகளை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2008ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இளைஞர்களை பெருமளவில் கட்சிக்குள் கொண்டு வரும் வகையில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை உருவாக்கினார். இந்த அமைப்பை ஜெயலலிதா உருவாக்கும்போது நான் அமைப்புசெயலாளராக இருந்தேன். இதில் இளைஞர்களை சேர்க்கும் பொறுப்பை என்னிடம் அவர் ஒப்படைத்தார். இதன் மூலம் 30 லட்சம் பேரை இதில் இணைத்தோம். அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி யாரை நம்பியும் இல்லை. தொண்டர்களையும், மக்களையும் நம்பி இருக்கும் கட்சி அதிமுக. எங்களை நாடித்தான் மற்றவர்கள் வருகிறார்கள்’ என்றார்.

The post கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் மும்மொழி கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பது சரியல்ல: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Edappadi Palanisamy ,Vellore ,Tamil Nadu ,Secretary General ,Tamil ,Nadu ,Eadapadi Palanisami ,Union Government ,Atamugawa ,Youth Girls Pashara Ambitious Zone Conference ,Dinakaran ,
× RELATED தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம்...