கைகளில் விலங்கு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் வேதனை

ஹோஷியார்பூர்: கைகளில் விலங்கு போடப்பட்டிருந்ததாகவும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததாகவும் அமெரிக்காவில் இருந்து விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டவர் வேதனையுடன் தெரிவித்தார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 104 இந்தியர்கள் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கை விலங்கு போடப்பட்டு கால்கள் சங்கிலியால் பிிணைக்கப்பட்டிருந்ததால் அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து 116 இந்தியர்களை ஏற்றி கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் நேற்று முன்தினம் இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது. இதில், 65 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள். மீதி உள்ளவர்கள் குஜராத், உபி, கோவா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பஞ்சாப்பை சேர்ந்த தல்ஜித் சிங் கூறுகையில், ‘‘ கடந்த 2022ம் ஆண்டு ஒரு ஏஜென்டுக்கு ரூ.65 லட்சம் பணம் கொடுத்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு சென்றேன். மெக்சிகோவில் இருந்து டிஜூவானா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் போது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து தடுப்பு முகாமில் அடைத்து வைத்தனர்.விமானத்தில் ஏற்றி வரப்பட்டவர்களில் 3 பெண்கள், குழந்தைகளை தவிர அனைத்து நபர்களின் கைகளில் கை விலங்கு மாட்டப்பட்டிருந்தது. கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது’’ என்றார்.

 

* கோழைகளின் பெருமை பேச்சு

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் குறித்து நமது நாட்டின் கோபத்தை பிரதமர் மோடி தனது நெருங்கிய நண்பரிடம் புகார் தெரிவிக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. கோழைகள் மட்டுமே 56 இஞ்ச் மார்பை பற்றி பெருமை பேசுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

The post கைகளில் விலங்கு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: