பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டிகள், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 3 சாதனைகளை தகர்க்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்கி உள்ளன. ஒரு நாள் போட்டிகளில் இதுவரை, கோஹ்லி 285 இன்னிங்ஸ்களில் ஆடி 13,963 ரன் குவித்துள்ளார். 300 இன்னிங்ஸ்களுக்குள் 14 ஆயிரம் ரன் குவித்த வீரர் யாரும் இல்லை. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களிலும், இலங்கையின் சங்கக்கரா 378 இன்னிங்ஸ்களிலும் 14 ஆயிரம் ரன்களை கடந்தனர்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் கோஹ்லி 37 ரன் எடுத்தாலே, 300 இன்னிங்ஸ்களுக்குள் 14 ஆயிரம் ரன் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில், கோஹ்லி 529 ரன்கள் எடுத்துள்ளார். இப்போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக ரன் குவித்த சர்வதேச வீரராக வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
எனவே, கோஹ்லி இன்னும் 173 ரன் குவித்தால் ஷிகர் தவானின் சாதனையையும், 263 ரன் குவித்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக, கிறிஸ் கெய்லை முந்தி முதல் இடத்தையும் பிடிப்பார். சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வரும் கோஹ்லி இங்கிலாந்துடன் கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் அரை சதம் விளாசி ஆறுதல் தந்தார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் சாதனை வீரராக கோஹ்லி உருவெடுப்பாரா என்பதை பொறுத்திருத்தே பார்க்க வேண்டும்.
The post 14,000 மைல்கல்லுக்கு 37 ரன் சாதனை சரவெடிகளை கொளுத்துவாரா கோஹ்லி? appeared first on Dinakaran.