×

ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: செயல்பாடுகள் குறியீட்டில் தமிழகம் முதலிடம்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை – சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை” என்ற தலைப்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் கடந்த 13ம் தேதி டெல்லியில் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 73வது அரசியலமைப்பு திருத்தத்தில் கூறப்பட்டுள்ள “உள்ளாட்சி” என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து ஊராட்சி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பயணத்தில் டெல்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனம் தயாரித்த இந்த ஆய்வறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மதிப்பீட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலமைப்பு அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி அமைப்புகள் எவ்வளவு பங்காற்றியுள்ளன என்பதற்கான ஆழமான பகுப்பாய்வை இந்த அறிக்கை வழங்குகிறது. மேலும் மாநில அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள வளங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியாக பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு செயல்திறனை உடையதாக உள்ளது என அளவீடு செய்கிறது. கட்டமைப்பு, செயல்பாடுகள், நிதி, பிரதிநிதிகள், திறன் மேம்பாடு, பொறுப்புடைமை ஒட்டு மொத்த குறியீட்டின் படி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது கடத்தில் உள்ளது. ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதலிடத்தில் உள்ளது.

ஆய்வு அறிக்கையின் படி செயல்முறைப்படுத்தும் காரணிகளின் கணக்கீட்டின் படி தமிழ்நாடு அதிக மதிப்பெண்களையும், திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் இரண்டாவது இடத்தையும், நிதி பரிவர்த்தனைகளை பொறுத்தவரை தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு ஊரக திட்டங்களில் ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஊரக உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகளின் திறன் மேம்பாடு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சியை நடத்துவதிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது. பயிற்சி நிறுவனங்களின் குறியீட்டில் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: செயல்பாடுகள் குறியீட்டில் தமிழகம் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ministry of Panchayathu Raj ,Delhi ,Government of Tamil Nadu ,
× RELATED டெல்லி செல்ல வந்த ராணுவ அதிகாரியிடம்...