மும்பை: இந்திய ராணுவத்தை அவமதித்த விவகாரத்தில் பெண் சினிமா தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது வழக்கு பதிந்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மும்பை போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தனது வெப் சீரியல் தொடர் ஒன்றில், இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.
மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்பவர் அளித்த புகார் மனுவில், ‘ஏக்தா கபூர் வெளியிட்ட ‘ஆல்ட் பாலாஜி’ தொடரில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் செயலில் ஈடுபடுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காட்சியை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் பார்த்தேன். மலிவான விளம்பரத்திற்காக இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ராணுவ சீருடையில் தேசிய சின்னத்தையும் அவமதிக்கும் வகையிலும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்ட வெப் தொடரால், நாட்டின் கண்ணியம், பெருமை ஆகியவை குறைத்து மதிப்பிடுவது போன்று உள்ளது. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 202 இன் கீழ் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. போலீசார் வழக்கு பதியாமல் இழுத்தடித்து வந்த நிலையில், அவர் பாந்த்ராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முறையிட்டார். நீதிமன்றம் இந்தப் புகாரை விசாரித்தது. தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 202 இன் கீழ், மேற்கண்ட புகார் குறித்து வரும் மே 9ம் தேதிக்குள் மும்பை காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
The post ராணுவத்தை அவமதித்த விவகாரம்; பெண் சினிமா தயாரிப்பாளர் மீது வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.