×

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா..? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம்

சென்னை: நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சமுக வலைதளப்பதிவில்:
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?

தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம். சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது! என கூறியுள்ளார்.

The post நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா..? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy ,Udayanidhi ,Union ,Minister of Education ,Chennai ,Deputy Chief ,Union Education Minister ,Dharmendra Pradhan ,Udayaniti Katum ,
× RELATED உழவர் வாழ்வு செழிக்கட்டும்!;...