திருப்பூர், பிப்.16: திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் குண்டடம்,பொங்கலூர்,அவிநாசிபாளையம்,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல் வழக்கமாக கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக வரும் தக்காளியை விட விற்பனைக்கு அதிகளவு கொண்டு வரப்பட்டதன் காரணமாக விலை பல மடங்கு குறைந்துள்ளது. மொத்த விலையில் 15 கிலோ டிப்பர் தக்காளி ரூ.80 முதல் ரூ.120 வரையிலும், சில்லறை விற்பனையில் 15 கிலோ ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்னம்பாளையம் பகுதிக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிகள் கூறுகையில்:ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருப்பதால் விளைச்சல் அதிகரித்து விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கும்,வியாபாரிகளுக்கும் கட்டிப்படியாகாத விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் வண்டி வாடகைக்கு கூட கட்டுப்படியாகத விலையில் விற்பனை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.ஆனால், விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்வுடன் வாங்கி செல்கின்றனர்.
The post வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.