×

தமிழகத்திலேயே முதல்முறையாக கணினி மூலம் பொதுத் தேர்வு எழுதும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்: முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி

பூந்தமல்லி, பிப். 16: தமிழகத்திலேயே முதல்முறையாக பார்வைத்திறன் குறைபாடுடைய அரசுப்பள்ளி மாணவர் கணினி மூலம் 12ம் பொதுத் தேர்வு எழுதவுள்ளார். இதற்காக அவர் முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக மாணவ மாணவிகள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பூந்தமல்லியில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கு 18 மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் வழக்கமாக தேர்வு எழுதும்போது அவர்கள் சொல்லச்சொல்ல மற்றொருவர் தேர்வு எழுதுவார். தற்போது வரை தமிழகத்தில் இப்படித்தான் பார்வை குறைபாடுடைய மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இங்கு 12ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் என்ற மாணவர் கணினி மூலம் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றார்.‌ இது தொடர்பாக கணினி மூலம் தேர்வு எழுத அனுமதி கேட்டு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து வாசிப்பாளர் ஒருவர் கேள்விகளை வாசிக்க, அந்த மாணவர் கணினியில் அதற்கான பதிலை எழுதுவார்.

தமிழகத்திலேயே கணினி மூலம் தேர்வு எழுதும் பார்வைத் திறன் குறைபாடுள்ள முதல் மாணவன் என்ற பெருமையை ஆனந்த் பெற்றுள்ளார். இதற்காக இவர் இரண்டு ஆண்டுகள் கடினமாக பயிற்சி பெற்றுள்ளார். மேலும் டைப்ரைட்டிங் பயிற்சிக்கும் சென்றுள்ளார். பல்வேறு கட்ட பயிற்சிகள் நடத்தப்பட்ட பின்பு இவர் கணினி மூலம் தேர்வு எழுத தயாராகி உள்ளார். இதற்காக பிரத்யேகமாக கணினியில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கணினி மூலம் தேர்வு எழுத உள்ளார்.

வழக்கமாக ஒரு மாணவருக்கு மூன்று மணி நேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும் நிலையில், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர் ஆனந்த் கூறும்போது, அரசுப் பள்ளியில் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் சொல்லச் சொல்ல மற்றொருவர் எழுதும் நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக கணினியில் சொந்தமாக தேர்வு எழுதுவது வரவேற்பு பெற்றுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று மற்ற மாணவர்களும் கணினி மூலம் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்.

The post தமிழகத்திலேயே முதல்முறையாக கணினி மூலம் பொதுத் தேர்வு எழுதும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்: முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Deputy Chief Minister ,Poonamalli ,Minister ,Deputy ,
× RELATED கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும்...