×

கோவில்பதாகை ஏரிக்கரையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் கால்வாய் அகலப்படுத்தும் பணி நிறுத்தம்: வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆவடி, பிப். 16: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு கோயில்பதாகை ஏரியில் இரண்டு கலங்கள் உள்ளது. இதில், பெரிய ஏரி கலங்களை 12 மீட்டர் அகலமும், 5 அடி நீளமும் ஆழப்படுத்தி தூர் வாரும் பணிக்காக சுமார் ₹38 லட்சம் நிதி ஒதுக்கி, கடந்த மாதம் அமைச்சர் நாசரால் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரையின் இருபுறமும் அரசு வாய்க்கால் புறம்போக்கு நிலத்தின் மீது கோழிக்கறி கடை, மாட்டு இறைச்சி கடை, மளிகைக் கடை, ஹார்டுவேர்ஸ் கடை, பேக்கரி கடை என தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பணி முறையாக நடைபெறாத சூழல் உருவாகியுள்ளது.

இதில் இறைச்சி கழிவுகளை மழைநீர் கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி நீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆவடியில் இருந்து கொள்ளுமேடு, ஆரிக்கம்பேடு, காட்டூர் கிராமம், காட்டூர் தொழிற்சாலை, பம்மதுகுளம், செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்கின்றனர். மேலும், ஆவடி ரயில் நிலையம், ஆவடி மார்க்கெட், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் செல்வோர் என தினசரி லட்சக் கணக்கானோர் இங்குள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கன்னடபாளையம்-செங்குன்றம் சாலையையும் அதிகமானார் பயன்படுத்தி வருகின்றனர்.

கரையின் இரு புறமும் ஆவடியில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் கடைகள் ஆக்கிரமித்திருப்பதால் வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்படுகிறது. கடந்த ஜனவரி 2ம் தேதி வளைவில் திருபிய இருவர் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வருவாய்த் துறையினர் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாய் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆவடி மாநகராட்சி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் செண்பகவல்லி ரவிச்சந்திரன் கூறியதாவது: கோவில்பதாகை மற்றும் கன்னடப்பாளையும் பகுதியில் அமைந்துள்ள கோவில்பதாகை ஏரி மழைக்காலங்களில் நிரம்பி கணபதி அவென்யூ, சுந்தரராஜ பெருமாள் கோவில் தெரு, கிருஷ்ணா அவென்யூ, ராமகிருஷ்ணா நகர், மங்களம் நகர், சென்ட் பிரான்சிஸ் நகர், நிதி அவென்யூ, பூங்குழலி நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இதனால் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக மழைக்காலங்களில் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு கலங்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி உபரி நீரை கிருஷ்ணா கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு சென்றடைய திட்டமிட்டு அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருபுறமும் மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கூடங்கள் போன்ற கடைகளை அமைத்துள்ளதால் கால்வாயை அகலப்படுத்த முடியாமல் பணிகளை நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் மழைநீர் வழிந்து சாலையின் இருப்பினும் செல்லக்கூடிய அபாயம் இருப்பதால் அதிகாரிகள் ஆய்வு செய்து இருபுறம் அமைந்துள்ள வணிக நிறுவனங்களையும், தனிநபர் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வாய்க்காலை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

The post கோவில்பதாகை ஏரிக்கரையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் கால்வாய் அகலப்படுத்தும் பணி நிறுத்தம்: வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kovilpakai ,Avadi ,Temple Lake ,5th Ward ,Avadi Municipality ,Kovilpakai Erikar ,Dinakaran ,
× RELATED ஆவடி பருத்திப்பட்டு ஏரியில்...