×

மகளிர் பிரீமியர் லீக் டி20: 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

வதோதரா: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வதோதராவில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா 11, ஹேலி மேத்யூஸ் 0 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்தோரில் நாட் சிவர் பிரன்ட் ஆட்டமிழக்காமல் 80 ரன், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன் குவித்தனர். 19.1 ஓவரில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து டெல்லி அணி 165 ரன் இலக்குடன் களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி, 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த வீராங்கனைகள் ராதா யாதவ்( 9)மற்றும் அருந்ததி ரெட்டி(2) ஆகியோர் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

* முதல் போட்டியில் பெங்களூரு வெற்றி
நேற்று முன்தினம் இரவு நடந்த டபிள்யுபிஎல் டி20 மகளிர் கிரிக்கெட் 3வது சீசன் முதல் போட்டியில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி துவக்க வீராங்கனை பெத் மூனி அற்புதமாக ஆடி 56 ரன் குவித்தார். கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 79 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பின், 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. துவக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9, டேன்னி ஹையாட் ஹாட்ஜ் 4 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கம் தந்தனர். இருப்பினும் எலிஸ் பெர்ரி 57, ரிச்சா கோஷ் 64, கனிகா அஹுஜா 30 ரன் விளாசினர். இதனால் 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்து பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் ஆட்ட நாயகி.

The post மகளிர் பிரீமியர் லீக் டி20: 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's Premier League T20 ,Delhi Capitals ,Vadodara ,Women's Premier League ,WPL) T20 ,Mumbai Indians ,Dinakaran ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் டி20: நேரடி இறுதி வாய்ப்பை பறிகொடுத்த மும்பை