×

இந்திய பாதுகாப்பிற்கு அமெரிக்கா ஆதரவு; டிரம்ப் – மோடி சந்திப்பை விமர்சித்த சீனா: எங்களை குறிவைக்க வேண்டாம் என்று அறிக்கை

பீஜிங்:இந்திய பாதுகாப்பிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ள நிலையில், டிரம்ப் – மோடி சந்திப்பை சீனா விமர்சித்துள்ளது. மேலும் எங்களை குறிவைக்க வேண்டாம் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார். பல்வேறு பிரச்னைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஆலோசனை நடத்தினார். இரு தலைவர்களின் சந்திப்பின் போது சீனா குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையிலான சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவில், சீனாவை யாரும் பிரச்னையாக மாற்றக்கூடாது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பானது, மற்ற நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது.

இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரை குறிவைக்கவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ கூடாது. பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. உண்மையில், மோடிக்கும், டிரம்புக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்தியாவுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. செய்தியாளர்களை இரு தலைவர்களும் சந்தித்த போது, ‘சீனாவை எப்படி தோற்கடிக்க முடியும்?’ என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘நாங்கள் யாராக இருந்தாலும் எங்களால் அவர்களை தோற்கடிக்க முடியும்; ஆனால் யாரையும் வீழ்த்த விரும்பவில்லை. நாங்கள் (இந்தியா – அமெரிக்கா) சரியான திசையில் பயணிக்கிறோம். சீனாவுடன் நல்ல உறவைப் பேணுவோம். கொரோனா காலத்திற்கு முன்பு வரை எனக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நல்ல உறவு இருந்தது. உலகளவில் சீனாவின் பங்கு முக்கியமாக உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் சீனா உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை பொருத்தமட்டில், அதன் எல்லையில் மோதல்கள் இருப்பதை காண முடிகிறது. அந்த மோதல்கள் மிகவும் கொடூரமானவை. என்னால் உதவ முடிந்தால், கண்டிப்பாக உதவ விரும்புகிறேன். சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

முன்னதாக டிரம்புக்கும் மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்க டிரம்ப் சம்மதம் தெரிவித்ததால், தற்போது சீன வெளியுறவு அமைச்சகம் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

The post இந்திய பாதுகாப்பிற்கு அமெரிக்கா ஆதரவு; டிரம்ப் – மோடி சந்திப்பை விமர்சித்த சீனா: எங்களை குறிவைக்க வேண்டாம் என்று அறிக்கை appeared first on Dinakaran.

Tags : US ,India ,China ,Trump ,Modi ,Beijing ,Dinakaran ,
× RELATED மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா மீது டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்