கோவை, பிப். 15: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (73). சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சிவானந்தபுரத்தில் நிறைய வீடுகள் உள்ளது. அதில் சில வீட்டை மனைவி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மீதமுள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அந்த வீடுகளை தங்களது பெயருக்கு எழுதி வைக்குமாறு நடராஜனின் மகன்கள் ராஜபிரபு, செந்தில்பிரபு ஆகியோர் கேட்டு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு ராஜபிரபு, செந்தில்பிரபு, பேரன் பிரகதீஸ்வரன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே சொத்து தொடர்பாக மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜபிரபு இரும்பு ராடால் நடராஜனை தாக்கினார்.
மற்ற இருவரும் சேர்ந்தும் நடராஜனை சரமாரியாக தாக்கினர். இதில் நடராஜனுக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் ராஜபிரபு, செந்தில்பிரபு மற்றும் பேரன் பிரகதீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post சொத்து தகராறில் முதியவர் மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.