சென்னிமலை, பிப். 15: சென்னிமலை அருகே 40 அடி உயர மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி, கீழே இறங்க மறுத்த வாலிபரை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜான் புஷ்பராஜ் (32). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், ஜான் புஷ்பராஜ் நேற்று காலை ஊத்துக்குளி சாலையில் உள்ள 40 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி கீழே இறங்க மறுத்தார்.
மேலும், தொட்டியின் மேலே அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சென்னிமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி, ஜான் புஷ்பராஜை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ஜான் புஷ்பராஜிடம் இதுபோல் மேலே ஏற கூடாது என அறிவுறுத்தி, அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post சென்னிமலையில் 40 அடி உயர மேல்நிலை தொட்டியில் ஏறிய வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.