கீவ்: உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா டிரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், டிரோன்களின் மூலம் ரஷ்யா செர்னோபில்லில் அழிக்கப்பட்ட நான்காவது அலகு உலையை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு அமைப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அணு உலை மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, அது அணைக்கப்பட்டு விட்டது. டிரோன் தாக்குதலால் செர்னோபில் அணு உலை கதிர்வீச்சு தடுப்பு அமைப்பு சேதமடைந்துள்ளது. தற்போதைய சூழலில் கதிர் வீச்சு அளவு அதிகரிக்கவில்லை, என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அணுசக்தி நிறுவனம் கூறுகையில்,அணு உலையில் வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியி்ல் ஈடுபட்டனர்.
இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,‘‘ அணு ஆயுத கட்டமைப்புகள், அணு சக்தி நிலையங்களின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டுகளில் எந்த வித உண்மையும் இல்லை. போரை முடிவுக்கு கொண்டு வர புடினுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை முறியடிப்பதற்காக உக்ரைன் அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர்’’ என்றார்.
* அமெரிக்காவிடம் திட்டம் இல்லை
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் அமெரிக்காவிடம் இருப்பதாக தான் நம்பவில்லை என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் உள்ள முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முனிச் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி,‘‘ போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த திட்டம் அமெரிக்காவிடம் இருப்பதாக நான் நம்பவில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறும் புடினை உலக தலைவர்கள் நம்பக்கூடாது.பேச்சுவார்த்தைக்கு முன்னர் போரை நிறுத்தும்படி புடினிடம் அமெரிக்கா கூற வேண்டும்’’ என்றார். இந்த மாநாட்டில் ஜே.டி.வான்சுடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
The post செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.