- சீமான்
- வடலூர் காவல் நிலையம்
- பெரியார்
- வடலூர்
- கடலூர்
- நாதம் தமிழர் கட்சி
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- பெரியார்...
வடலூர், பிப். 15: நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த மாதம் 8ம்தேதி வடலூரில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட தி.க. தலைவர் தண்டபாணி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த 10ம்தேதி சென்னை நீலாங்கரையில் சீமானின் வீட்டுக்கு சென்ற நெய்வேலி இன்ஸ்பெக்டர் சுதாகர் இவ்வழக்கு தொடர்பான சம்மனை நேரில் வழங்கினர். அதில் 14ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல் 11 மணிக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீமான் நேற்று காலை ஆஜராகவில்லை. அவரது தரப்பில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் பாசறை அணியின் கடலூரை சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் வடலூர் காவல் நிலையம் வந்து கடலூர் ஏஎஸ்பி நல்லதுரை, நெய்வேலி டிஎஸ்பி பொறுப்பு ஜெயச்சந்திரன், வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், இந்த வழக்கின் புகார் மனுவை போலவே தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் சீமானுக்கு எதிராக கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதும் மற்றும் சட்ட விரோதமானதும் ஆகும். ஆகவே மேற்கண்ட வழக்குகளை ஒரே வழக்காக சேர்க்க வேண்டும். அதற்கு ஒரே விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிஜிபியிடம் கடந்த 11ம் தேதி கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
எனவே அந்த மனுவின் மீது தலைமை காவல்துறை இயக்குனர் உரிய முடிவை தெரிவித்த பின்பு விசாரணைக்கு ஆஜராகுவது பொருத்தமாக அமையும். எனவே விசாரணை தேதி தலைமை காவல்துறை இயக்குனர் முடிவு தெரிவிக்கும் வரை அல்லது தலைமை காவல்துறை இயக்குனர் உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணையை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இதனிடையே சீமான் நேரில் ஆஜராகலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக வடலூர் காவல் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பெரியார் குறித்த அவதூறு கருத்து வழக்கு வடலூர் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.