உளுந்தூர்பேட்டை, பிப். 15: உளுந்தூர்பேட்டை அருகே காதலித்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி இளைஞர் ஒருவர் நள்ளிரவில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் சலீம் பாஷா. இவருடைய மகன் கலீம் (21) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் இளம்பெண் தனது தாயுடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கலீம் திடீரென தனது வீடு அருகே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினாராம். தனது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூச்சலிட்டுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், முத்துக்குமார் மற்றும் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கலீமை மீட்க முயன்றனர்.
அப்போது தனது காதலி வந்தால் தான் கீழே இறங்குவேன், இல்லை என்றால் குதித்து விடுவேன் என கலீம் மிரட்டியதால் அனைவரும் செல்போன் டவர் கீழே நின்றனர். போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலீம் காதலித்த பெண்ணை கிராமத்தில் இருந்து கார் மூலம் உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து வந்தனர். போலீசார் அந்த பெண் வந்து விட்டதாக கூறியதை அடுத்து கலீம் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து கலீமை பிடித்த போலீசார் உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காதலியை தன்னுடன் சேர்க்கக் கோரி நள்ளிரவு நேரத்தில் 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post காதலித்த பெண்ணை சேர்த்து வைக்கக் கோரி நள்ளிரவில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் appeared first on Dinakaran.