கிருஷ்ணகிரி: பாஜ தன் பக்கம் இழுக்கவே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக சந்தேகம் எழுப்பி உள்ளது. கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ., நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலில் மிகப்பெரிய அனுபவம், பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர் செங்கோட்டையன். அவரை, ஜெயலலிதா மதிப்பும், மரியாதையுடன் நடத்தினார். அதே போல் தான் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நடத்திச் செல்கிறார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், செங்கோட்டையன் அதிமுகவிற்கு உறுதுணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. ஒன்றிணைவதில் எனக்கு எந்தவித நிபந்தனையும் இல்லை எனக்கூறும் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த கணமே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்கிறார்.
கட்சியை எதிர்த்தும், எதிரிகளுடன் இணைந்தும் களத்தில் நிற்கிறார். இபிஎஸ் குறித்து பேச, டிடிவி தினகரனுக்கு எவ்வித தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது. அரசியல் ரீதியாக எதிர் அணியாக எங்களை விமர்சிக்கலாம், ஆனால் எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு அவருக்கு உரிமையில்லை. ஒரு கட்சியின் தலைவராகவும் நடிகராகவும் இருக்கக்கூடிய விஜய், செல்லும் இடத்தில் கூட்டம் சேரலாம் என்கிற அடிப்படையில் அவருக்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜயை, தன் பக்கம் இழுப்பதற்காக அவரை சந்தோஷப்படுத்துவதற்காக கொடுத்திருந்தால் பாஜ.,வின் வரலாறு எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
The post பாஜ பக்கம் இழுக்க விஜய்க்கு ‘ஒய்’ பாதுகாப்பு: அதிமுக சந்தேகம் appeared first on Dinakaran.