×

அண்ணன் ஓபிஎஸ்… டிடிவி.தினகரன் சார்… செல்லூர் ராஜூ திடீர் மரியாதை

வாடிப்பட்டி: அண்ணன் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் சார் என மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ திடீரென மரியாதையுடன் பேசியது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், பரவையில் எம்எல்ஏ நிதியில் கட்டிய அங்கன்வாடி மையத்தை மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அவரிடம் செய்தியாளர்கள், மீண்டும் அதிமுகவில் இணைவது தொடர்பாக டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ‘‘அவர்களது கருத்து குறித்து அண்ணன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் சாரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அதிமுகவில் எவ்வித பிளவும் இல்லை. எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம். நடிகர் விஜய் பிரபலமானவர். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர். இளைஞர்கள் பட்டாளம் அவருக்கு உள்ளது. எனவே, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளனர்’’ என்றார். இதுவரை நடந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் கூட்டங்களில் ஓபிஎஸ் என்றும், டிடிவி.தினகரன் என்றும் தான் செல்லூர் ராஜூ கூறி வந்தார். தற்போது திடீர் மரியாதை தந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதேநேரம் மதுரையில் உள்ள மற்றொரு மாஜி அமைச்சரான உதயகுமார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கட்சியின் சீனியர்களை சகட்டுமேனிக்கு துரோகிகள் என்று கூறி வருவது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ‘மனைவியை காதலிங்க…’
காதலர் தினம் குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளிக்கையில், ‘‘இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன். எங்கு சென்றாலும் அவரையும் அழைத்துச் செல்கிறேன். என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள். அனைவருக்கும் அன்பு தினமான காதலர் தின வாழ்த்துக்கள்’’ என்றார்.

The post அண்ணன் ஓபிஎஸ்… டிடிவி.தினகரன் சார்… செல்லூர் ராஜூ திடீர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : TTV.Dhinakaran ,Sellur Raju ,Vadipatti ,Former Minister ,AIADMK ,Anganwadi center ,MLA ,Paravai, Madurai district… ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் அதிமுக இணையுமா? நாளை...