கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். அதன்படி அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இவர்கள் விசா உள்பட முறையான ஆவணங்களுடன் அமெரிக்கா செல்கின்றனர்.
அதே வேளையில் ஒரு தரப்பினர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அதே போல இந்தியர்கள் பலர் தங்களின் விசா காலம் முடிந்த பிறகு நாடு திரும்பாமல் அங்கேயே தங்கிவிடுகின்றனர். இதனால் அவர்களும் சட்டவிரோத குடியேறிகளாக மாறிவிடுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறது டிரம்ப் நிர்வாகம்.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 104 இந்தியர்களுடன் ‘சி-17’ ரக ராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு கடந்த பிப்., 5ம் தேதி வந்து சேர்ந்தது. இந்த, 104 பேரில் பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக இடம்பெற்று இருந்தனர். அவர்கள் அமெரிக்க விசா பெறுவதற்காக உள்ளூர் ஏஜன்டுகளை நம்பி, 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து, ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் புறப்படும் 2வது விமானம் நாளை (பிப்.,15) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தரையிறங்குகிறது. அமெரிக்காவில் 18,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் வாரங்களில் அவர்கள் ஒவ்வொரு குழுவாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்க பயணத்தின்போது டிரம்ப் உடனான சந்திப்பில், சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் மீண்டும் இந்தியாவுக்கு அழைக்க தயார். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக பலர் ஏமாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றனர். சட்டவிரோதமாக ஆட்களை நாடு கடத்தும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
The post அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு கடத்தல்! appeared first on Dinakaran.