திருப்பூர், பிப்.14: உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காலப்போக்கில் காதலர்களுக்கு பிரியமாய் வழங்கக்கூடிய வகையில் வெவ்வேறு பொருட்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் ரோஜாப்பூக்களை கொடுத்து காதலை வெளிப்படுத்துவதும், ஏற்கனவே காதலர்களாக இருப்பவர்கள் ரோஜா பூவை ஒருவருக்கொருவர் வழங்கி அன்பை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்றைய தினம் முதலே திருப்பூர் பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஓசூர்,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் 20 ரோஜாப்பூக்கள் கொண்ட கட்டு ரூ.300 முதல் 350 ருபாய் வரையிலும், பூ ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.35 வரை என விற்கப்பட்டது. இன்றைய தினம் விற்பனையை பொறுத்து விலை மாறுபடும் எனவும் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் திருப்பூர் கடைவீதி பகுதிகளில் இருந்த பேன்சி மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இதய வடிவிலான கீ செயின் ,பொம்மைகள்,தலையணை,காதலர்களுக்கான கவிதை எழுதப்பட்ட போட்டோ பிரேம்கள், கரடி பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
The post இன்று காதலர் தினம் பூ மார்க்கெட்டில் குவிந்த ரோஜாக்கள் appeared first on Dinakaran.