- திமுக
- ஈரோடு
- திருப்பூர்
- விழுப்புரம்
- மதுரை
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- செஞ்சி மஸ்தான்
- பொதுச்செயலர்
- Duraimurugan
- தின மலர்
சென்னை: திமுகவில் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு சில மாவட்டங்களுக்கு புதிதாக பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் சு.முத்துசாமி நியமிக்கப்படுகிறார். ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகள் அடங்கும். ஈரோடு வடக்கு மாவட்டம் (அந்தியூர், பவானிசாகர், கோபி செட்டிப்பாளையம் தொகுதி) பொறுப்பாளராக என்.நல்லசிவம், ஈரோடு மத்திய மாவட்டம் (பவானி, பெருந்துறை தொகுதி) பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் கிழக்கு மாவட்டம் (பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதி) பொறுப்பாளராக க.செல்வராஜ் எம்எல்ஏ,
திருப்பூர் மேற்கு (காங்கேயம், தாராபுரம் தொகுதி) பொறுப்பாளராக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்டம் (அவினாசி, திருப்பூர் வடக்கு தொகுதி) பொறுப்பாளராக என்.தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்டம் (உடுமலைப்பேட்டை, மடத்துகுளம் தொகுதி) பொறுப்பாளராக இல.பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் வடக்கு மாவட்டம் (செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதி) பொறுப்பாளராக செஞ்சி கே.மஸ்தான் எம்எல்ஏ, விழுப்புரம் தெற்கு மாவட்டம் (திருக்கோவிலூர்,
விக்கிரவாண்டி தொகுதி) பொறுப்பாளராக கவுதம சிகாமணி, விழுப்புரம் மத்திய மாவட்டம் (விழுப்புரம், வானூர் தொகுதி) பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் எம்எல்ஏ, மதுரை வடக்கு மாவட்டம் (மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு தொகுதிகள்) பொறுப்பாளராக அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டம் (மதுரை வடக்கு, மதுரை மத்திய, மதுரை தெற்கு தொகுதி) பொறுப்பாளராக கோ.தளபதி எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் க.அண்ணாதுரை எம்எல்ஏ, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக பழனிவேல் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக்கை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கே.எம்.ராஜு, நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வரும் டி.பி.எம்.மைதீன்கானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக மு.அப்துல் வகாப் எம்எல்ஏ, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ்.கோவிந்தரராஜன் எம்எல்ஏவை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
* மிகப்பெரிய மாறுதல் ஏன்?
திமுகவில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு மாவட்டங்களை குறிவைத்து ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவரும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆனவருமான லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவமாக திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு செஞ்சி மஸ்தானும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் படுகர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷ் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூரில் தலித் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த பழனிவேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
The post ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை 4 மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றம்: புதிய பொறுப்பாளர்கள் நியமனம், 4 மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட்டனர்: பரபரப்பு புதிய தகவல்கள் appeared first on Dinakaran.