சென்னை: பள்ளிகளில் மாணவ மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும், அவர்களின் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கல்விச்சான்று ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் அந்த பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், தற்போது செய்முறைத் தேர்வுகள் வருகிற பிப்ரவரி 28ம் தேதியுடன் நடத்தி முடிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில் மார்ச் மாதம் ெபாதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதை அடுத்து சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுத்தேர்வு எப்படி நடத்த வேண்டும், கடந்த முறை பொதுத்தேர்வு நடந்தபோது ஏதாவது விமர்சனங்கள் வந்தனவா, அதை எப்படி சரி செய்வது, குறிப்பாக எந்தவித குறைபாடுகளும், தவறுகளும் இல்லாமல் தேர்வை நடத்தி முடிப்பது, குறிப்பாக போக்குவரத்து, மின்சாரம், மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் விமர்சனம் எழாத வகையில் முறையாக செயல்படுத்த வேண்டும் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடக்கும் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளில் ஒட்டுமொத்தமாக 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 12 லட்சத்து 14 ஆயிரம், மாணவியர் 12 லட்சத்து 93 ஆயிரம், தனித் தேர்வர்கள் 48 ஆயிரத்து 987 பேர் பங்கேற்கின்றனர். பொதுத்தேர்வு வழிகாட்டுதல் சார்ந்த இதற்கான ஆய்வுக் கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு தேர்வு தொடர்பான கையேடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வும், தேர்வுக்கு பிறகும் விடைத்தாள் திருத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் பெருமைமிக்க மாநிலமாக இருக்கிறது. தேர்வு எழுதும்ேபாது மாணவ மாணவியர் பதற்றம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு அச்சத்தை போக்கும் வகையில் 3 டிவிஷனல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
புதிய மாவட்டங்களில் தேர்வுத்துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்போதைக்கு தேர்வுக்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர். இல்லாத இடங்களில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு புதிய மாவட்டங்களுக்கு உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள்.ஏசர் ஆய்வு குறித்து விமர்சனங்கள் வருகின்றன. அந்தக் குழுவினர் அளிக்கும் தரவுகள் எப்போதும் தமிழ்நாட்டு கல்வி குறித்து குறைகூறித்தான் வெளியிடுகிறார்கள்.
வடமாநிலங்களில் கல்வியின் நிலை நன்றாக இருப்பது போலவும், தமிழ்நாட்டில்தான் தரம் இல்லை என்பது போலவும் தரவுகளை வெளியிடுகின்றனர். எங்கிருந்தோ யாரோ ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து கல்வி குறித்து கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்கள் வெளியிடுவதை விட நாமே அதை செய்தால் என்ன என்ற அளவில், அரசே கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் குறைகளை தெரிவிக்க மனசுப்பெட்டி என்ற புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்்கள் அச்சமின்றி தங்கள் பிரச்னைகளை தெரிவித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக புகார்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வரைவு அறிக்கையை தயார் செய்யவும் முடிவு செய்துள்ளோம். பாலியல் தொடர்பாக ஏற்னெவே 238 புகார்கள் வந்துள்ளன. அதில் 11 பேர் குற்றம் இ்ல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
7 பேர் இறந்துவிட்டனர். 56 பேர் மீதான விசாரணை குறித்து மார்ச் மாதம் 10ம் தேதி இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்படும். இது தவிர 58 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும். புகார் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
* பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் குறைகளை தெரிவிக்க மனசுப்பெட்டி என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
* பாலியல் தொடர்பாக ஏற்கனவே 238 புகார்கள் வந்துள்ளன. அதில் 11 பேர் குற்றம் இ்ல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
The post பள்ளிகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணமானால் ஆசிரியர்கள் பணிநீக்கம்: படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் ரத்தாகும், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை appeared first on Dinakaran.