புதுடெல்லி : வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டன.வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதா, பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்த குழு 30க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி மசோதா தொடர்பாக ஆய்வு செய்தது. இதில் பல்வேறு திருத்தங்களுக்கு இரு தரப்பிலும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு விவாதம் நடந்தது. இதையடுத்து, பாஜ கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்த 14 திருத்தங்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் தரப்பில் கொண்டு வந்த திருத்தங்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிக்கையும், திருத்தங்களின் அடிப்படையிலான இறுதி வரைவு மசோதா மீது கடந்த 29ம் தேதி வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால், உறுப்பினர்களுடன் கடந்த 30ம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டுக்குழுவில் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஏற்கப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் கூட்டு குழுவின் அறிக்கை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் குஜராத்தில் தொழிலதிபர் ஒருவருக்கு திட்டத்தை ஒதுக்குவது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம் பிர்லா, நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும், அவையின் மரபை பின்பற்றுமாறும் வலியுறுத்தினார். இந்நிலையில், மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் வக்ப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் மட்டும் கூட்டு குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள், குறிப்புகள் இடம் பெறவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி கருத்துக்கள் ஏன் இடம்பெறவில்லை. இது ஜனநாயக விரோதமானது. அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.
காங்கிரஸ் போராட்டம்
கேரள கடலோர மற்றும் வன எல்லையோர சமூகங்களை பாதுகாக்க கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், டிசம்பர் 27ம் தேதி முதல் வயநாட்டில் காட்டு யானைகளால் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய சூழ்நிலை. இந்த பிரச்னையை தணிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதி அனுப்ப வேண்டும். உள்ளூர் மக்களிடம் நான் பேசியபோது, அவர்கள் தங்களால் இயன்றதை செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் போதுமான நிதி இல்லை. அவர்களுக்கு அவசரமாக உதவி தேவை, இன்று (மக்களவையில்) அதை எழுப்புவேன்’ என்றார்.
The post வக்பு வாரிய மசோதா தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.