தேனி, பிப். 13: தேனி அருகே வீரபாண்டியில், பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து டிவி மற்றும் 9 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி அருகே வீரபாண்டியில் அம்மன்நகரில் குடியிருப்பவர் ஆறுமுகம்(49). இவர் வீரபாண்டி கோயில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த 10ம் தேதி, சென்னையில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் மிளகாய் தூள் தூவப்பட்டும், பீரோ திறந்த நிலையிலும் கிடந்தது. பீரோவிற்குள் வைத்திருந்த சுமார் 9 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிற்குள் புகுந்து நகை, டிவியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post தேனி அருகே பூட்டிய வீட்டில் டிவி, நகை திருட்டு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.