விருதுநகர், பிப். 13: உழவன் செயலி மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேளாண் குறித்த பல்வேறு விபரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவன் செயலி மூலம் அனைத்து பயிர் இனங்களிலும், வேளாண் திட்டங்களிலும் இனம் வாரியாக வழங்கப்படும் மானிய சதவீத விபரங்கள் மற்றும் பயனாளிகள் தகுதிகள் குறித்த விபரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் வேளாண்மை துறை சார்ந்த திட்ட பயன்களை பெறுவதற்கு இந்த சேவை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிர் காப்பீடு செய்தது முதல் இழப்பீடு பெறும் நிலைவரையுள்ள தகவல்களை பதிவு செய்த தொலைபேசி எண் மூலம் பெற முடியும். தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளிலுள்ள முக்கிய உரங்களின் இருப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள விதை இருப்பு விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்தி கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் அன்றைய தேதியில் ஏலத்தில் விற்பனையான வேளாண் விளைப் பொருட்களின் விலை விபரங்களை அறிந்து கொள்ளலாம். அடுத்த 4 நாட்களுக்கு தங்களது பகுதியில் வானிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பயிர் சாகுபடி குறித்த அறிவுரையையும் பெற இயலும். மேலும் கிராம அளவிலான வேளாண் விரிவாக்க அலுவலர்களின் நிரந்த பயண திட்டத்தில் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரின் பெயர், செல் எண், வருகை இடம் மற்றும் தேதி ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். எனவே விவசாயிகள் உழவன் செயலியினை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவைப்படும் வேளாண்மை சார்ந்த விபரங்களை தாமதமின்றி பெற்று பயனடையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post விவசாயிகள் வேளாண்மை விபரங்களுக்கு உழவன் செயலி பயன்படுத்தலாம்: அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.