×

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? நவாஸ்கனி எம்பி விளக்கம்

கடையநல்லூர்: திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது என்று நவாஸ்கனி எம்பி விளக்கமளித்து உள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பி பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து முழுமையாக பேச நான் தயாராக இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எந்த நிலையிலும் எந்த மதத்தினரையும் தவறாக பேசியது கிடையாது. யாரும் புண்படும்படி நடந்தது கிடையாது.

வக்பு வாரிய தலைவர் என்ற முறையில், நடைமுறையில் இருந்ததை தொடருங்கள் என்று மட்டும்தான் கேட்டேன். ஆனால் அதை திரித்து ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்படுத்துவது, இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வக்பு வாரியத்தின் சொத்துகளை சட்டத்தின் மூலமாக அபகரிக்க முயலும் ஒன்றிய அரசின் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை தோற்கடிப்பதற்கான திட்டங்களை முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமலேயே ஒன்றிய அரசு செயல்படுகிறது.

இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் வக்பு வாரியத்தின் அதிகாரம் பறிபோகும். சொத்துகள் பறிபோகும். ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியாக பாதிப்படைய செய்வதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருகிறது. மேலும் சட்ட ரீதியாக இதை எதிர் கொள்ளவும், முஸ்லிம் லீக் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? நவாஸ்கனி எம்பி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruparankundram ,Navaskani ,Kadayanallur ,Kadayanallur, ,Nellai district ,Tamil Nadu Waqf Board ,Indian Union… ,
× RELATED திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில்...