×

2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸி வெற்றி முகம்: 8 விக். இழந்து இலங்கை தவிப்பு

காலே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் 3ம் நாளில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸி கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் 242 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஆஸி அணி, கடந்த 6ம் தேதி, 2வது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 2வது நாள் துவக்கத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி வீரர்கள் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 120, அலெக்ஸ் கேரி 139 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 3ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. உணவு இடைவேளைக்கு முன், ஆஸி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 414 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 131, அலெக்ஸ் கேரி 156 ரன் குவித்தனர். இலங்கை தரப்பில், பிரபாத் ஜெயசூர்யா 5, நிஷான் பெய்ரிஸ் 3, ரமேஷ் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. ஆஸி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்த வண்ணம் இருந்தனர். இருப்பினும் ஏஞ்சலோ மாத்யூஸ் சிறப்பாக ஆடி 76 ரன் எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 62.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்திருந்தது. குஸால் மெண்டிஸ் 48 ரன்னுடன் களத்தில் உள்ளார். 54 ரன் முன்னிலை பெற்றுள்ள அந்த அணி 4ம் நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர்கிறது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக உள்ளதாலும், இலங்கை வசம் 2 விக்கெட்டுகளே உள்ளதாலும், இப்போட்டியிலும் ஆஸி வெல்லும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

The post 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸி வெற்றி முகம்: 8 விக். இழந்து இலங்கை தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aussie ,Sri Lanka ,Galle ,Australia ,Dinakaran ,
× RELATED நியூசிக்கு எதிரான முதல் டி20 இலங்கை மகளிர் இமாலய வெற்றி