கட்டாக்: இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி, இன்று ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றும். அதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பெரிய மாற்றங்களின்றி வெற்றி அணியே களம் காணக் கூடும்.
அதே சமயம். காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத கோஹ்லி இன்று களம் காண்பாரா என்பதை அணி நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அப்படி விளையாட வந்தால் ஜெய்ஸ்வால் அல்லது, அக்சர் படேல் ஆகியோரில் ஒருவர் வெளியில் அமர்த்தப்படலாம். ஒருவேளை சரியாக ஆடாத ரோகித்தை வெளியில் உட்கார வைக்கும் அதிசயம் நடந்தாலும் நடக்கலாம். அதே போல் சாம்பியன்ஷிப் கோப்பையை கருத்தில் கொண்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்பது முதல் ஆட்டத்தில் பொய்த்து விட்டது. எனவே அவர் அல்லது மற்றொரு தமிழ்நாடு வீரரான வாஷிங்டன் சுந்தர் களம் காண்பது சந்தேகமே.
அதே நேரத்தில் டி20 தொடரை இழந்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்லும் கனவில் உள்ளது. அந்த கனவு கலையாமல் இருக்க இன்றைய ஆட்டத்தில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும். அதனால் இங்கிலாந்து அணி மாற்றங்களுடன் களம் காண்பது உறுதி. கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன் ஆகியோர் களம் காண்பதற்கான வாய்ப்பு அதிகம். எப்படி இருந்தாலும் இருவருக்கும் வெற்றி அவசியம். காரணம், நெருங்கி வரும் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர். அதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
The post இன்று 2வது ஒருநாள் ஆட்டம் அடிபட்ட புலியாய் இங்கிலாந்து: வெற்றி கர்ஜனையுடன் இந்தியா; விறுவிறுப்பை எதிர்நோக்கும் ரசிகர்கள் appeared first on Dinakaran.