×

பந்தலூரில் காட்டு யானை தாக்கி இருவர் காயம்

 

பந்தலூர், பிப்.8: பந்தலூர் அருகே குரூஸ் மலை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் காந்திமதி (60), கணேசன் (65). இவர்கள், நேற்று காலை விறகு சேகரிப்பதற்காக குரூஸ் மலை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குறுக்கிட்ட யானை ஒன்று இருவரையும் துரத்தி தாக்கி உள்ளது. இதில் காந்திமதிக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கணேசனை யானை தூக்கி வீசியதில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தலூர் ஆர்ஐ வாசுதேவன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் இருவரையும் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பந்தலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பந்தலூரில் காட்டு யானை தாக்கி இருவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Cruz Hill ,Ingo Nagar ,Pandalur Forest Reserve ,Nilgiris ,Dinakaran ,
× RELATED எருமாடு வெட்டுவாடி பொது மக்கள் நிலப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்